திடீரென வெடித்த எலெக்ட்ரிக் பைக் - தந்தை, மகள் பரிதாபமாக பலி!!
E-bike explodes in Allapuram area of Vellore Father and daughter die tragically !!

வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் எலெக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டதில் உருவான புகைமூட்டத்தில் சிக்கி தந்தை மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேலூரை அடுத்த சின்ன அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துரை வர்மா(49). இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் மோகன பிரீத்தி(13) 8ம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் ஊரில் நடைபெறும் திருவிழா ஒன்றில் பங்கேற்க இவர்கள் சென்றபோது அங்கு தாங்கள் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியிருக்கின்றனர். எலெக்ட்ரிக் பைக்கின் சார்ஜ் அதிகமாகி வயரில் தீப்பிடித்ததால் நள்ளிரவில் பைக் வெடித்து சிதறியது. 

இதனால் அருகிலிருந்த மற்றொரு பைக்கும் தீப்பற்றி எரிந்தது. இதனை வீட்டிற்குள்ளிருந்து பார்த்த தந்தையும் மகளும் புகைமூட்டம் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லவேண்டாம் என நினைத்து கழிவறையில் பதுங்கியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறையிலும் புகைமூட்டம் சூழ்ந்திருக்கிறது. இதனால் மூச்சுத்திணறி கழிவறையிலேயே தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர்.

துரைவர்மா வீட்டிலிருந்து அதிகப்படியான புகை வருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்திருக்கின்றனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. கழிவறையில் இருந்து உடல்களை மீட்ட காவல்துறையினர், பிரதேப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.