ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் மது மற்றும் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. துணை கலெக்டர் (கலால்) சத்ய பிரசாத், கலால் தாசில்தார் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
அப்போது கலெக்டர் பேசுகையில் இளைஞர்கள் போதை பொருட்களான குட்கா, கஞ்சா, மது போதை பழக்கத்தில் அடிமையாகாமல் இருக்க வேண்டும். போதை, மதுவுக்கு அடிமையானால் மயக்கம், வாந்தி ஏற்படும். நுரையீரல், கல்லீரல் பாதிப்பு, கண் பார்வை இழப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும். எனவே இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.