அரக்கோணம் அடுத்த தக்கோலம் காவல் நிலையத்தில் எஸ்பி தீபாசத்யன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, அரக்கோணம் இன்ஸ்பெக்டர்கள் சேதுபதி (தாலுகா), சீனிவாசன் (டவுன்), தக்கோலம் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் இருந்தனர்.பின்னர் எஸ்பி தீபா சத்யன் நிருபர்களிடம் கூறியதாவது:

'ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொள்ளப்படுகிறது. ரவுடியிசம் ஒடுக்கவும், கஞ்சா விற்பனையை தடுக்கவும், மேலும் பல்வேறு குற்ற செயல்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக, ரவுடியிசத்தை கண்டறிந்து முற்றிலும் ஒழிக்க அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை போலீஸ் சப்-டிவிசன்களில் 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 18 பேர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நாள்தோறும் அந்தந்த பகுதிகளில் மறைமுகமாக ரவுடியிசத்தை கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற் கொள்வார்கள். அதே போல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள். இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட கலெக்டருடன் இணைந்து பள்ளிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.