மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் 'மகம்" நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. 

மாசி பௌர்ணமி :Masi magam 2022 pournami 2022 :

மாசி பௌர்ணமி அன்றுதான் அன்னை உமையவள் காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவத்தில் தோன்றினாள். சிவபக்தனான தட்சன் சங்கினைத் தொட்டவுடன் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே மாசி பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வில் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.

வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசி பௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாசி பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் மாசி பௌர்ணமி மாசி 04ஆம் தேதி (16.02.2022) புதன்கிழமையன்று வருகிறது.

மாசிமகம் Maasi Makam 2022:


மாசிமக நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வாழ்வில் சத்விஷயங்கள் நம்மை வந்தடையும். மனதில் இருந்த குழப்பமும், பயமும் நீங்கும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இந்த வருடம் மாசிமகம் மாசி 05ஆம் தேதி (17.02.2022) வியாழக்கிழமையன்று வருகிறது.

பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். 

மாசிமகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். மாசிமகம் ஸ்நானம் செய்வோருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணத்தை படிக்கலாம் அல்லது கேட்கலாம், அதுவும் புண்ணியமே. 

நீராடும்போது ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை. நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல், மேலும் சிறப்புடையது.

பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசிமகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.

மாசிமகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளர செய்யும்.

இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.