தென்னக ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடியில் ஈடுபட்ட கபடி பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை அருகேஉள்ள எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 36). கபடி பயிற்சியாளரான இவர், தென்னக ரெயில்வேயின் கபடி விளையாட்டு அணியில் பயிற்சியாளராக வேலை செய்வதாக கூறி, பல்வேறு மோசடி லீலைகளில் ஈடுபட்டுள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டில் தென்னக ரெயில்வேயில், ஸ்டேசன் மாஸ்டர், இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைக்கு காலி இடங்கள் உள்ளதாகவும், அதில் உரிய வேலை வாங்கி தருவதாகவும் கூறி 43 பேர்களிடம் ரூ.1.70 கோடி பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகவும், ஜெயகாந்தன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் வந்தன.

சென்னை பரணிபுத்தூரைச்சேர்ந்த வினோத் என்பவர் கொடுத்த புகாரில், தனக்கும், தனது அண்ணனுக்கும் தென்னக ரெயில்வேயில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாக, ஜெயகாந்தன் மீது குற்றம் சாட்டினார். இது போன்ற புகார்கள் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.

இதன்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், புகார்களில் உண்மை இருப்பது தெரியவந்தது. மேலும் போலியான பணி நியமன ஆணை நகல்களை, பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து ஜெயகாந்தன் ஏமாற்றியதும் அம்பலமானது. அதன்பேரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.