திருப்பத்துார்-ஆம்பூரில், போலி தங்கக் காசுகள் கொடுத்து, ஓட்டு வாங்கி தலைமறைவான சுயேச்சை வேட்பாளர், அவரது கணவரை வாக்காளர்கள் தேடி வருகின்றனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில், 36வது வார்டைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பெண்கள் நேற்று மதியம் 1:00 மணிக்கு, அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்றனர்.போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:ஆம்பூர் நகராட்சி, 36வது வார்டைச் சேர்ந்த, தி.மு.க., பிரமுகர் துரைபாண்டி என்பவருக்கு கவுன்சிலர் 'சீட்' கிடைக்கவில்லை. இதனால், அவரது மனைவி மணிமேகலை சுயேச்சையாக, தென்னை மரம் சின்னத்தில் போட்டியிட்டார்.

மணிமேகலை, கணவர் துரைபாண்டியுடன் வந்து, தங்களுக்கு ஓட்டு போடும்படி கேட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் 1 கிராம் தங்கக் காசு என, 1,500 பேருக்கு கொடுத்தார். நாங்களும் தங்கக் காசுக்கு ஆசைப்பட்டு, அவருக்கே ஓட்டு போட்டோம். போலீசார் எச்சரிக்கைதங்கக் காசுகளை, அடகு கடையில் கொடுத்து பணம் கேட்டதற்கு, சோதனை செய்த கடைக்காரர் அனைத்தும் பித்தளைக்காசு என தெரிவித்தார். வாக்காளர்களை ஏமாற்றிய மணிமேகலை, வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.அவரது வீட்டுக்கு சென்றபோது மணிமேகலையும், கணவர் துரைபாண்டியும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கண்டுபிடித்து, தங்கக் காசுகளை வாங்கி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீசார், 'தேர்தல் விதிப்படி பணம், பரிசு பொருட்கள் வாங்கி ஓட்டு போடுவது சட்டப்படி தவறு. நீங்கள் புகார் கொடுத்தால், உங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். இதனால் வேறு வழியின்றி, வாக்காளர்கள் புகார் கொடுக்காமல் திரும்பினர்.சாயம் போன கொலுசுஇதேபோல, வேலுார் மாவட்டம், குடியாத்தம், திருவலம், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, சோளிங்கர் நகராட்சியில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளிக் கொலுசு, ஒரே நாளில் சாயம் போய் இரும்புக் கம்பியாக மாறியது.அரக்கோணம் நகராட்சி யில், வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தில் பெரும்பாலும், நகல் நோட்டுகளாக காணப்பட்டதாக புலம்புகின்றனர்.