வாலாஜாபேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் கொள்ளையர்கள் 3வது முறையாக நேற்று முன்தினம் இரவு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அபாய சங்கு ஒலித்ததால் ஐம்பொன் சிலைகள், உண்டியல் பணம் தப்பியது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை எம்பிடி ரோட்டில் 450 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 20 நாட்களில் பகலில் ஒரு நாளும், இரவில் ஒரு நாளும் கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். ஆனாலும் கொள்ளை முயற்சி தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் 3வது முறையாக நேற்று அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

ரோட்டுக்கு வடக்கு பகுதியில் உள்ள விசாலாட்சி நகரை ஒட்டிய காம்பவுண்டு சுவற்றின் மீது ஏறிய கொள்ளையர்கள் கோயில் உள்ளே புகுந்துள்ளனர்.

அங்குள்ள அலுவலக அறை மற்றும் ஸ்டோர்ரூம் ஆகியவற்றின் பூட்டு களை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். எதுவும் சிக்கவில்லை. இதனால் ஏமாந்த கொள்ளையர்கள், சுவாமி சன்னதி மெயின் கதவை திறக்க முயற்சித்துள்ளனர்.

அப்போது அபாயசங்கு (அலாரம்) ஒலிக்க ஆரம் பித்தது. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். தகவல் அறிந்த கோயில் நிர்வாகிகள் விரைந்து வந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவித்து ஆய்வு செய்ததில், அங்குள்ள சிசிடிவி கேமரா இணைப்பு தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது.

பின்னர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கொள்ளையடிக்க வந்த நபர்கள் இருவர் என்றும், அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல் தோற்றம் உள்ளதாக தெரியவந்தது. அபாய சங்கு ஒலித்ததால் ஐம்பொன் சிலைகள், உண்டியல் பணம் ஆகியன தப்பியது.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாலாட்சி நகர் மற்றும் காந்தி நகர் பகுதியில் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவு களை வைத்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.