நாடு முழுவதும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கும் மேல் இயக்கக்கூடாது என்றும் ஓராண்டு கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் அணிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருகிறது. 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இருசக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்துக்கும் மேல் இயக்கக்கூடாது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாட்டு நெறிமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது" என கூறப்பட்டுள்ளது.