ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த உத்திரம்பட்டு கிராமம் ஏசுநாதர் கோயில் தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகன் ராஜேஷ் (29). பெங்களூரில் உள்ள தனியார் லாரி கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை சென்னையில் உள்ள கம்பெனியில் லோடு ஏற்ற கன்டெய்னர் லாரியில் சென்றுள்ளார். வழியில் லாரியை ஓச்சேரியில் ரோட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு தனது சொந்த ஊரான உத்திரம் பட்டுக்கு குளிக்கச்சென்றுள்ளார். ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ், ரோட்டின் இரண்டு பக்கமும் தேடி பார்த்துள்ளார். இதுகுறித்து அவளூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப் இன்ஸ்பெக்டர் சேகர், சீனிவாசன் ஆகியோர் உடனடியாக அனைத்து டோல்கேட்டுக்கும் தகவல் அனுப்பினர்.
இதற்கிடையில், சுங்குவார் சத்திரம் அருகே லாரி நின்றிருப்பதாக தகவல் வந்தது. உடன் அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை மீட்டனர். லாரி திருடிய நபரை பிடித்து விசாரித்ததில், அவன் கடலுார் மாவட்டம் வடலுார் அடுத்த காட்டுக்கொள்ளை கிராமத்தை சேர்ந்த முத்து மகன் செல்வம் (27) என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் செல்வத்தை கைது செய்து வாலாஜா சப் ஜெயிலில் அடைத்தனர்.