“தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க முடியாது” - குடியரசு தின விழாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் சர்ச்சை
சென்னை ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து அங்கிருந்தவர்கள் கேட்டபொழுது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலிற்கு எழுந்து நிற்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் 73வது குடியரசு தின விழா இன்று (26.01.2022) காலை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவின் நிறைவாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

அப்பொழுது, அங்கிருந்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டபோது எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தனர். அவர்கள் எழுந்து நிற்காதது குறித்து அங்கிருந்தவர்கள் கேள்வியெழுப்பிய பொழுது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க அவசியமில்லை என உயர்நீதிமன்ற உத்தரவுள்ளதாகக் கூறினர். ஆனால், தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளதை குறிப்பிட்டு கேள்வியெழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர், இனி வரும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்பொழுது எழுந்து நிற்போம் என ரிசர்வ் வங்கி ஊழியர்கள் உறுதி அளித்தபின் வாக்குவாதம் முடிவிற்கு வந்தது.