குடியரசு தின விழாவில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.
ராணிப்பேட்டையில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

கலெக்டர் கொடியேற்றினார்

இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் 18 அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், டாக்டர்கள், போலீசார் மற்றும் பணியாளர்கள் உள்பட 338 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 19 போலீசாருக்கு தமிழக முதல்-அமைச்சரின் பதக்கங்களையும் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் 54 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 96 ஆயிரத்து 184 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லம், கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் சுரேஷ், உதவி கலெக்டர்கள் பூங்கொடி, சிவதாசு, துணை கலெக்டர்கள் சேகர், இளவரசி, தாரகேஸ்வரி, மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காந்தி சிலைக்கு மாலை
முன்னதாக ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிப்பது தவிர்க்கப்பட்டது.

இதனால் ஆற்காடு நகராட்சி தொல்காப்பியர் தெருவில் உள்ள லோகநாதன் என்ற சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டிற்கு சமூகப்பாதுகாப்பு துணை கலெக்டர் மற்றும் ஆற்காடு தாசில்தார் ஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்கள்.