ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 284 பேர் வாக்களிக்க உள்ளனர் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நகர்புற உள்ளாட்சி தேர்தல்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை நேற்று மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 4-ந் தேதி கடைசி நாளாகும். 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், 7-ந் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவும், 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு மார்ச் மாதம் 2-ந் தேதி பதவியேற்பு நாளும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் மார்ச் மாதம் 4-ந் தேதியும் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கா் ஆகிய 6 நகராட்சிகள் மற்றும் அம்மூர், கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, பனப்பாக்கம், தக்கோலம், திமிரி, விளாப்பாக்கம் ஆகிய 8 பேரூராட்சிகள் உள்ளன.

நகராட்சிகள்


அரக்கோணம் நகராட்சியில் 36 வார்டுகளும், 74 வாக்குச்சாவடி மையங்களும், 66 ஆயிரத்து 845 வாக்காளர்களும் உள்ளனர். ஆற்காட்டில் 30 வார்டுகளும், 59 வாக்குச்சாவடி மையங்களும், 46 ஆயிரத்து 988 வாக்காளர்களும் உள்ளனர்.

மேல்விஷாரத்தில் 21 வார்டுகளும், 42 வாக்குச்சாவடி மையங்களும், 39 ஆயிரத்து 600 வாக்காளர்களும் உள்ளனர். ராணிப்பேட்டையில் 30 வார்டுகளும், 47 வாக்குச்சாவடி மையங்களும், 41 ஆயிரத்து 689 வாக்காளர்களும் உள்ளனர்.

வாலாஜாவில் 24 வார்டுகளும், 32 வாக்குச்சாவடி மையங்களும், 26 ஆயிரத்து 790 வாக்காளர்களும் உள்ளனர். சோளிங்கரில் 27 வார்டுகளும், 35 வாக்குச்சாவடி மையங்களும், 29 ஆயிரத்து 531 வாக்காளர்களும் உள்ளனர். 6 நகராட்சிகளில் மொத்தம் 2 லட்சத்து 51 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர்.

பேரூராட்சிகள்


அம்மூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 10 ஆயிரத்து 750 வாக்காளர்களும் உள்ளனர். கலவை பேரூராட்சியில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 7 ஆயிரத்து 708 வாக்காளர்களும் உள்ளனர். காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 12 ஆயிரத்து 172 வாக்காளர்களும் உள்ளனர்.

நெமிலியில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 9 ஆயிரத்து 310 வாக்காளர்களும் உள்ளனர்.

பனப்பாக்கத்தில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 10 ஆயிரத்து 77 வாக்காளர்களும் உள்ளனர். தக்கோலத்தில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 9 ஆயிரத்து 398 வாக்காளர்களும் உள்ளனர். திமிரி பேரூராட்சியில் 15 வார்டுகளும், 17 வாக்குச்சாவடி மையங்களும், 13 ஆயிரத்து 481 வாக்காளர்களும் உள்ளனர்.

விளாப்பாக்கத்தில் 15 வார்டுகளும், 15 வாக்குச்சாவடி மையங்களும், 6 ஆயிரத்து 945 வாக்காளர்களும் உள்ளனர்.

8 பேரூராட்சிகளில் மொத்தம் 79 ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர்.

6 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 284 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

மேலும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அனைத்து நன்னடத்தை விதிமுறைகளும் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.