அரக்கோணம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து துப்பாக்கியால் சுட்டு நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். யூடியூப் பார்த்து சுட்டதாக மாணவன் தெரிவித்துள்ளார்.

நகை- பணம் கொள்ளை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் புஸ்கரன் (வயது 24). தோட்டத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் புஸ்கரன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 2 பேர் புஸ்கரன், அவருடைய தாய் சுதா, பெரியம்மா லதா, பாட்டி ரஞ்சிதம்மா ஆகியோரை கைத்துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

பின்னர் 25 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை பிடிக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவன் உள்பட 2 பேர் கைது

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வியாசபுரம் பகுதியை சேர்ந்த சின்ராசு (23) மற்றும் 17 வயது பள்ளி மாணவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏர் கன், வீச்சரிவாள், 2 செல்போன்கள், விலை உயர்ந்த கேமரா, ஸ்மார்ட் டி.வி., லேப்-டாப், ஒரு மோட்டார் சைக்கிள், துப்பாக்கி குண்டுகள், 1,000 பாய் மற்றும் கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-


தனிப்படை விசாரணை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில் இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், விழுப்புரம் மாவட்ட இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அரக்கோணம் புகழேந்தி கணேஷ், பொன்னேரி குணசேகரன், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ரவிச்சந்திரன், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு மனோகரன் ஆகியோர் தலைமையில் 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள், தொழில் நுட்பப் பிரிவு, தடய அறிவியல், மோப்ப நாய், கை ரேகை ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுமார் 60 போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கொள்ளை சம்பவங்கள் நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் டவர் மற்றும் அழைப்புகள் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பழைய குற்றவாளிகளை கண்டறிய ஆந்திரா, மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

யூடியூப் பார்த்து


இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருவலங்காடு வியாசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் மகன் சின்னராசு (23) மற்றும் 17 வயது பள்ளி மாணவன் ஒருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப் படை போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி அரக்கோணம் அருகே உள்ள முள்வாய் கிராமத்தில் தனியாக இருந்த தம்பதிகளை தாக்கி ஸ்மார்ட் டி.வி., கேமரா, லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை கொள்ளையடித்ததாகவும், செய்யூர் கன்னிகாபுரத்தில் 4 பேரை தாக்கி கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர். சின்னராசுவும், 17 வயது மாணவனும் உறவினர்கள். மாணவன் அரக்கோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருவதாகவும், கன்னிகாபுரத்தில் துப்பாக்கியால் சுட்டது இந்த மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. ஏர் கன் இயக்குவது குறித்து யூடியூப் மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்று வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்றும் இவர்களுடன் வேறு யாராவது உள்ளனரா? என்றும் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறி்னார்.


10 நாட்களில் கொள்ளையர்களை கைது செய்த தனிப் படை போலீசாரை டி.ஐ.ஜி. ஏ.ஜி.பாபு பாராட்டினார்.