✍ 2007ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

✍ 1926ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தார்.


நினைவு நாள் :-


ஜெகதீஷ் சந்திர போஸ்

🌽 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பங்களாதேஷில், ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.

🌽 லண்டனில் இருக்கும்போது லார்ட் ரிலே என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு இவருக்கு கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார்.

🌽 கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜெகதீஷ் சந்திர போஸ் இயற்பியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டது. இதற்கு காரணம் இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அவர்கள் முழு ஊதியத்தையும் வாங்க தகுதி அற்றவர்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் ஜெகதீஷ் சந்திர போஸின் அறிவுக்கூர்மையை பாராட்டி அவருக்கு முழு ஊதியமும் வழங்கப்பட்டது. நிலுவையில் இருந்த தொகையும் வழங்கப்பட்டது.

🌽 இயற்பியல் அறிஞரான இவர் ரேடியோ அலைகளில் ஆய்வு செய்து, மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை கண்டுபிடித்தார். இவர் இயற்றிய நூல்கள் Response in the Living and Non-Living மற்றும் The Nervous Mechanism of Plants.

🌽 ஜெகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரும் வெற்றியையும், புகழையும் ஈட்டினார். இந்தியாவின் புகழை உலகெங்கும் மிளிரச் செய்த இவர் தன்னுடைய 78வது வயதில் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


சுரதா

🌟 கவிதைக்கு புது வடிவம் கொடுத்த உவமைக் கவிஞர் சுரதா 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி தஞ்சை மாவட்டம் பழையனூரில் (சிக்கல்) பிறந்தார். இவருடைய இயற்பெயர் ராசகோபாலன்.

🌟 பாவேந்தரின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதை அடிப்படையாகக் கொண்டு சுப்புரத்தினதாசன் என்று தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார். இவர் சுரதா என்னும் பெயரில் இலக்கியப் படைப்பாளியாக திகழ்ந்தார்.

🌟 செய்யுள் மரபு மாறாமல் உவமைகளுடன் கவிதை படைப்பதில் வல்லவர் என்பதால் உவமைக் கவிஞர் என போற்றப்பட்டார். இவர் பாரதிதாசனை 1941ஆம் ஆண்டு சந்தித்தார். பின்பு சிறிதுகாலம் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

🌟 இவர் மங்கையர்க்கரசி திரைப்படத்துக்கு 1944ஆம் ஆண்டு வசனம் எழுதினார். அமுதும் தேனும் எதற்கு, ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்பது போன்ற பாடல்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார்.

🌟 பல நூல்களாக இருந்த பாரதிதாசன் கவிதைகள் இவரது முயற்சியால் ஒரே தொகுப்பாக வெளியிடப்பட்டது. தமிழக அரசின் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் ராஜராஜன் விருது, மகாகவி குமரன் ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகள், பரிசுகள் பெற்றுள்ளார். மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடந்த உலக தமிழ் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

🌟 இவரது தமிழ் தொண்டை கௌரவித்து சென்னையில் இவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. கவிதை படைப்பதை உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா 84-வது வயதில் (2006) மறைந்தார்.