தீபாவளி என்றாலே தீப ஒளியில் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் பெருகி நாம் ஏற்றி வணங்கும் தீபத்தின் வழியாக மகாலட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வாசம் செய்வதாகும். இவ்வாறு தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, பூஜைகள் செய்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இனிப்புகளை பகிர்ந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு இனிய தினமாகும். நாளைய சிறப்பு வாய்ந்த திருநாளில் ஒரு சில குறிப்பிட்ட பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதன் மூலமாக நமது குடும்பத்தின் செல்வ நிலை உயர்ந்து பணம் நம் கையில் நிரந்தரமாக வந்துகொண்டிருக்கும். அவ்வாறு தீபாவளி அன்று செய்ய வேண்டிய ஒரு சில சிறப்பு செயல்களைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தீபாவளி அன்று காலை எழுந்து குளித்து விட்டு அன்றைய தினத்திற்கான வேலைகளை செய்யத் துவங்குவோம். அவ்வாறு இந்த வருடம் தீபாவளி, அமாவாசை, சஷ்டி மற்றும் வியாழகிழமை இவை அனைத்தும் ஒரே நாளில் சேர்ந்து வருவதால் அன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக பார்க்கப்படுகிறது. எனவே நாளைய தினம் காலை பிரம்ம முகூர்த்தத்தில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வாங்கி நமது வீட்டில் வைப்பதன் மூலமும் நமது செல்வ நிலை உயர்ந்து வாழ்க்கைத்தரம் மேல் நோக்கி செல்ல வழிவகுக்கிறது. அவ்வாறு முதலில் நாம் வாங்க வேண்டிய முக்கியமான ஒரு பொருள் நமது அஞ்சரை பெட்டியில் வைக்கக் கூடிய சோம்பு ஆகும். இதனை பெருஞ்சீரகம் என்றும் பலர் கூறுவர். இந்த ஒரு பொருளை புதியதாக வாங்கி நமது அஞ்சறைப் பெட்டியில் போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது நமது வீட்டில் எப்பொழுதும் தானியவகைகள் குறையாமல் இருக்க வழி புரிகிறது.

அடுத்ததாக சர்க்கரை மற்றும் பட்டை வாங்க வேண்டும். பின்னர் சர்க்கரையை ஒரு சிறிய கிண்ணத்தில் முழுவதுமாக நிரப்பிக்கொண்டு அதன்மீது ஒரு சிறிய துண்டு பட்டையை வைத்துவிட வேண்டும். பிறகு அதனை பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி, பூஜை செய்துவிட்டு, மீண்டும் அதனை சமையலறையில் வடக்கு திசை நோக்கி இருக்குமாறு வைத்து விட வேண்டும். ஒரு நாள் முழுவதுமே அப்படியே வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது வீட்டில் ஐஸ்வரியம் பெருகி அள்ள அள்ள குறையாத செல்வம் சேரும்.

அதன் பிறகு ஒரு மண் உண்டியலை தீபாவளி அன்று புதியதாக வாங்கி சமையல் அறையில் வைத்து சேமிக்க துவங்க வேண்டும். இவ்வாறு செய்வது மிகவும் விசேஷமாக அமைகிறது. தீபாவளி அன்று அமாவாசை, சஷ்டி, வியாழக்கிழமை என்பதால் இதனை துவங்குவதன் மூலம் நமது வீட்டில் செல்வம் குறையாமல் நிறைந்து கொண்டே இருக்கும்.

பிறகு முக்கியமாக நம்மால் முடிந்த அளவு தங்கம் வாங்க வேண்டும். அவ்வாறு தங்கம் வாங்க முடியாது என்பவர்கள் தங்கத்திற்கு ஈடாக கிழங்கு மஞ்சளை வாங்க வேண்டும். பின்னர் இந்த மஞ்சளுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை சேர்த்து, அதனை பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பின்னர் இவற்றை பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும். இவை பணத்தை ஈர்க்கும் திறன் பெற்றதால் நம்மிடம் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.