ஆற்காடு அருகே உள்ள ஓட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து பெற்ற சிறுமி, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.




ஆற்காடு அருகே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமி ஒருவர் பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

வேலூர் அடுத்த மேல் மொணவூர் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர். விழா முடிந்ததும் தனது காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

சென்னை செல்லும் வழியில் ராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு அடுத்த வேப்பூர் - மேல்விஷாரம் பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் முதல்வர் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். பின்னர், 15 நிமிடம் கழித்து ஓட்டலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது, அங்கு தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஓட்டலுக்கு வந்திருந்த சிறுமி ஒருவர் பூங்கொத்துடன் காத்திருப்பதை முதல்வர் கவனித்தார். இதையடுத்து, சிறுமியை அருகில் வரவழைத்து அவரிடம் இருந்து பூங்கொத்தை பெற்றுக்கொண்டார். அப்போது சிறுமி தீபாவளி நல்வாழ்த்து கூறினார். 

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினும், சிறுமிக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அந்த சிறுமி முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இச்சம்பவம் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அங்கிருந்த அனை வருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், ஆர். காந்தி, அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ ஜெ.எல். ஈஸ்வரப்பன். மாவட்ட திமுக துணைச்செயலாளர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் ஏ.வி.சாரதி, முகமது அமீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.