அரக்கோணம் அடுத்த நாகவேடு அரும்பாக்கம் புதிய தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (43). லாரி டிரைவர். இவர் அரக்கோணத்தில் இயங்கி வரும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் ரூ. 13 ஆயிரத்து 800 சம்பளம் தர வேண்டியுள்ளதாம். இந்த பணத்தை பல தடவை கேட்டும் உரிமையாளர் தரவில்லை.

இந்நிலையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரின் லாரி சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சித்தேரி அருகில் சென்றுகொண்டிருந்த போது திருநாவுக்கரசு லாரியின் கண்ணாடி மீது கல்வீசினார். இதில் லாரியின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து லாரியை ஓட்டிச்சென்ற வாணியம்பேட்டையை சேர்ந்த ராமன் (26) புகார் கொடுத்தார். அதன்பேரில் அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர்.