ராணிப்பேட்டையில் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்து பேசுகையில், வரும் ஆண்டுகளில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
ராணிப்பேட்டை மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடந்தது. இதில் 20 தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு 8, 10 மற்றும் ஐடிஐ படித்த வர்களை தேர்வு செய்தனர். முகாமுக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பயிற்சி சேர்க்கை ஆணை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
முதல்வர் தினமும் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அவரது முக்கிய நோக்கம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு தரவேண்டும் என்பதுதான். மேலும் தொழிற்சாலைகளை மேம்படுத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும்.
முகாமில் 20 தொழில் நிறுவனங்கள் வந்துள்ளன. தொழில் நிறுவனங்களுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் தேவைப்படுகிறது. இது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. தற்போது நல்லாட்சி நடைபெறுகிறது. இனிவரும் 2 அல்லது 3 ஆண்டுகளில் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழிற்பழகுநர் பயிற்சியில் நன்றாக பணிபுரிந்தால் தொடர்ந்து அந்நிறுவனத்திலேயே முழுநேர பணியாளராக பணியாற்றலாம். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் 160 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முகாமில், உதவி இயக்குநர் மாவட்டதிறன் பயிற்சி) சீனி வாசன், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் பாபு, அன்புச்செல்வி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.