வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக ஜெய்பீம் படத்தை எடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமகவினர் எஸ்பியிடம் புகார் அளித்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் பாமக மேற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த கூட்டத்தில் பெரும் பான்மை சமுதாயமாக உள்ள வன்னியர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாக ஜெய்பீம் படத்தில் காட்சிகளை வைத்துள்ளது, வன்னியர்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. எனவே இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் ஜெய்பீம் திரைப்படம் எடுத்த இயக்குநர் ஞானவேல், தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்கருப்பனிடம் புகார் அளித்தனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் தாலுகா அலுவலகம் முன் நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து போலீஸ் நிலையம் சென்று சூர்யா மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் அ.ம. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், சமூகநீதிப் பேரவை துணைச் செயலாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.
நெமிலி:
நெமிலி காவல் நிலையத்தில் ஜெய்பீம் படம் தொடர்பாக பாமகவினர் புகார் மனு அளித்தனர். மனுவில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித அடையாளமான 1995ம் ஆண்டு காலண்டர் அக்னி கலசத்தை காட்சிப்படுத்தி வன்னியர் சமுதாயத்தை வில்லனாக காட்டி ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்சிப்படுத்தியது. சகோதரத்துவம் உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்திற்கிடையே ஜாதி வன்மத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஜோதிகா சூர்யா, இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
கலவை:
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் சாதி பிரி வினையை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்த வர்கள் மீது வழக்குப்ப திவு செய்து கைது செய்ய வேண்டும் என பாமக சார்பில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டதலைவர் கே.எஸ்.ஆறுமுகம், கலவை காவல் நிலைத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அப்போது கலவை பேரூ ராட்சி செயலாளர் அன்பு. திமிரிகிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.