திருவள்ளூர் : தீரன் அதிகாரம் ஒன்று படப்பாணியில் திருடி வந்த மோசமான வடமாநில கொள்ளை கும்பலை, மிக சமார்த்தியமாகவும், தீவிரமாகவும் தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளது திருவள்ளூர் மாவட்ட காவல் துறை. அவர்களை பற்றிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சி ரகமாக உள்ளது .
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே எளாவூர் கிராமத்தில் உள்ள ஆக்ஸிஸ் தனியார் ஏடிஎம் மையத்தில் உள்ளே புகுந்து கேமரா மீது ஸ்ப்ரே அடித்து ஏடிஎம் மெஷினை கேஸ் வெல்டிங் மூலம் கட்டிங் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தது ஒரு வடமாநில கொள்ளை கும்பல்.

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு இதுபற்றி தொலைபேசி எண்ணுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைத்தார். இரவு ரோந்து காவலர்கள் வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் கொண்டு வந்திருந்த டாடா இண்டிகா காரில் தப்பி சென்றனர்.

உடனே எஸ்கேப்

அவர்களை ரோந்து காவலர்கள் துரத்தியதில் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி தலைமறைவாகி விட்டனர் இதுதொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டார்.

குண்டூர் விரைந்தது

இந்த உத்தரவின் பேரில் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளர் சுரேஷ் அவர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பல்வேறு கோணங்களில் குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் விட்டுச் சென்ற காரின் பதிவு எண் கொண்டு விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்த காவலில் இருந்து திருடி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.


ராணிப்பேட்டை ஏடிஎம்

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே 16 9 2021 அன்று இரவு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள ஆக்சிஸ் தனியார் வங்கி ஏடிஎம் மையத்திலும் மர்ம நபர்கள் 4 லட்சம் கொள்ளையடித்த சம்பவமும் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் சிசிடி காட்சிகளை கொண்டு ஆராய்ந்ததில் இரு சம்பவங்களிலும் ஈடுபட்ட கொள்ளையர்கள் ஒரே நபர்கள் என்று கண்டறியப்பட்டது .

ராஜஸ்தான் லாரி

இதனிடையே ராணிப்பேட்டையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் ஆரம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சம்பவ இடத்திற்கு அருகே ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த லாரி ஒன்று இருப்பதை கண்டறிந்தனர். இதை அடுத்து ஏளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்தனர்.


சிக்கிய கொள்ளையர்கள்

அவ்வழியே வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லாரியை தனிப்படை காவல்துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மடக்கிப்பிடித்தனர். பிடிபட்ட லாரியில் சந்தேகத்திற்கிடமான முகச்சாயல் இருந்த 4 நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் செய்த தீவிர விசாரணை நடத்தினர்.

ஒரே நபர்கள்

அவர்கள் அரியானா மாநிலம் நுவும் மேவாத் சேர்ந்த சாஜித். ஹர்ஷத் எமந்தன் மற்றும் ஒரு சிறார் என்பதும் மேற்படி ஆரம்பாக்கம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் அவர்கள்தான் எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.


போலீஸ் விசாரணை

இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து ஏடிஎம் மிஷின் களை உடைக்க பயன்படுத்திய வெல்டிங் மிஷின் கேஸ் சிலிண்டர் மற்றும் 45 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது மேலும் கொள்ளையடிக்கப்பட்ட மீதி பணத்தை அரியானா மாநிலத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. அந்த பணத்தை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர விசாரணையில் ஈடுபட்டு குற்றவாளிகளை கண்டறிந்து தனிப்படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனிடையே கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சி களையும் மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.