டெல்லியில் இன்று (02/10/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜல் ஜீவன் இயக்க செயலியை அறிமுகம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ஜல் ஜீவன் இயக்க பஞ்சாயத்துகள் மற்றும் தண்ணீர் வழங்கும் குழுக்கள், கிராம தண்ணீர் மற்றும், சுகாதாரக் குழுக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே வெள்ளேரி கிராம மக்களிடம் பிரதமர் காணொளி மூலம் கலந்துரையாடினார். மேலும், வெள்ளேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுதாவிடம் பிரதமர் கலந்துரையாடினார். நெசவாளர்கள் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் ஆரணி பட்டு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

"ஜல் ஜீவன் திட்டத்தால் வெள்ளேரியில் 412 வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. குழாய் மூலம் தண்ணீர் கிடைப்பதால் பெண்கள் வேலை எளிமையாகியுள்ளது; அதற்கு நன்றி" என்று பிரதமரிடம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.