வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை , மேல்பாடி வள்ளிமலை , மகிமண்டலம் மற்றும் தமிழக எல்லை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கும் வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகளை நோட்டமிட்டு திருடர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்தனர். இது பொன்னை மற்றும் மேல்பாடி போலீசாருக்கு சவாலாக இருந்து வந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக பொன்னை இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார் . மேலும் இந்த விசாரணையில் பொன்னை பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் சில மாதங்களாக நோட்டமிட்ட போலீசார் அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் 3 வாலிபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . திருட்டு நகைகளை பொன்னையில் உள்ள 2 நகை அடகு கடைகளில் அடகு வைத்து பணத்தை பெற்றதாக தெரியவந்தது .
இதையடுத்து 2 நகை கடை உரிமை யாளர்களை நேற்று போலீசார் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் 3 பேரிடம் இருந்து வெள்ளி மற்றும் தங்க நகைகள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர் .