வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ், அஸ்வினி தம்பதியர். இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். வழக்கம்போல் அக்டோபர் 4ஆம் தேதி மதியம் உள்ளிபுதூர் பகுதியிலுள்ள விளைநிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்காக விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

மாலை நேரம் மாட்டினை பிடித்து வருவதற்காக ஜெயபிரகாஷ் மற்றும் அவரது மனைவி அஸ்வினி நிலத்திற்கு சென்றுள்ளனர். மாட்டை பிடித்து வர சென்ற தம்பதியினர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த உறவினர்கள் இரவு முதலே ஜெயபிரகாஷ் மற்றும் அஸ்வினியையும் தேடி வந்துள்ளனர்.


இந்த நிலையில் உள்ளிபுதூர் பகுதியில் விளைநிலத்தில் அஸ்வினி, ஜெயபிரகாஷ் மற்றும் பசுமாடு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அக்டோபர் ஐந்தாம் தேதி காலை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்துள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் திருவலம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவலம் காவல்நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


விளைநிலத்தில் வனவிலங்களில் இருந்து பயிர்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த வேலியில் மின்சாரம் செலுத்தி மின்வேலி அமைக்கப்பட்டதால் இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரிடம் காட்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மின்சாரம் தாக்கி தம்பதி மற்றும் பசுமாடு உயர்ந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.