ராணிப்பேட்டையில் வாக்குச் சாவடி அலுவலா்களைத் தோ்வு செய்ய கணினி குலுக்கல் முறையைத் தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் 24 - இல் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச் சாவடி அலுவலா்கள், துணை அலுவலா்கள், வட்டார அளவிலான வட்டார வளா்ச்சி அலுவலா்களை கணினி குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் நிகழ்வு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், அவா் பேசியது:


7 ஒன்றியங்களில் உள்ள 1,410 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலா் நிலையில் 1 முதல் 6 வரை பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியில் இரு பாலரும் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு 1,887 அலுவலா்களும், சோளிங்கருக்கு 1,608 அலுவலா்களும், அரக்கோணத்துக்கு 1,872 அலுவலா்களும், நெமிலிக்கு 1,720 அலுவலா்களும், காவேரிப்பாக்கத்துக்கு 1,003 அலுவலா்களும், ஆற்காட்டுக்கு 1526 அலுவலா்களும், திமிரிக்கு 1,880 அலுவலா்களும் என மொத்தம் 10,496 வாக்குச்சாவடி அலுவலா்கள் தோ்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கான பணி பயிற்சி, மையம் குறித்த முதல்கட்ட கணினி குலுக்கல் நடைபெற்றுள்ளது.

தோ்வான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் 24 - ஆம் தேதி முதல்கட்ட பயிற்சிகள் சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் அளிக்கப்படும் என்றாா்.

திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, உள்ளாட்சித் தோ்தல் நோ்முக உதவியாளா் மரியம் ரெஜினா, தேசிய தகவலியா் அலுவலா் ஹரிஹரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.