1885ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.

1928ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் சந்திர மிஸ்ரா பிறந்தார்.

1916ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார். 

1725ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி ஆங்கிலேய அரசியல்வாதி ராபர்ட் கிளைவ் பிறந்தார்.


முக்கிய தினம் :-


உலக இதய தினம்

இதயத்தைப் பாதுகாக்கவும் இதயநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செப்டம்பர் 29ஆம் தேதியை உலக இதய தினமாக அனுசரிக்கப்படுகிறது.

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் தான் அதிகம் என்று உலக சுகாதார நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் 1 கோடியே 73 லட்சம் பேர் இந்நோயால் இறக்கின்றனர்.


நினைவு நாள் :-


ருடால்ஃப் டீசல்

🌸 டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) 1858ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.

🌸 இவருடைய உடல்நலம் குன்றியதால் 1879ஆம் ஆண்டு படிப்பை தொடர முடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.

🌸 பிறகு இவர் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்து, நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர்.

🌸 இவர் இன்ஜின்கள் குறித்தும் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை நான்கு மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.

🌸 நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்து, இறுதியில் அதற்கு பதிலாக 'கம்ப்ரெஷன் இக்னிஷன்' இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே, இவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது.

🌸 உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாக போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கி தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய இவர் தனது 55வது வயதில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மறைந்தார்.


பிறந்த நாள் :-


அரங்க சீனிவாசன்

கவித்தென்றல் அரங்க சீனிவாசன் 1920ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பர்மாவின் பெகு மாவட்டம், சுவண்டி என்ற சிற்றூரில் பிறந்தார். இவருடைய தாய் மங்கம்மாள், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவின் வீராங்கனை.

இவர் மனித தெய்வம் காந்தி காதை என்ற நூல் எழுதுவதற்காக இந்தியா முழுவதும் பயணித்து, தகவல்களைச் சேகரித்தார். ஐந்து காண்டங்கள், 77 படலங்கள், 5,183 பாடல்களை கொண்ட காவியம் இது. இவரது காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும் என்ற ஆய்வு நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது.

சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தின் அவைக் கவிஞராகவும் செயல்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, தமிழ்க் கலைக் களஞ்சியம் உருவாக ஒத்துழைத்தார்.

வைணவத் தத்துவ அடிப்படைகள், தியாக தீபம், வழிகாட்டும் வான்சுடர், சுதந்திரப் போரின் எழுச்சிக் களம், அகமும் புறமும், தாகூர் அஞ்சலி, சுயசரிதை நூல், தேசிய கீதம், நீலிப்பேயின் நீதிக்கதைகள், திருவரங்கத் திருநூல் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

ஆசுகவி, சித்ரகவி, மதுரகவி, வித்தாரக்கவி என்றெல்லாம் போற்றப்பட்ட அரங்க சீனிவாசன் தனது 76வது வயதில் (1996) மறைந்தார்.