தமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி, மாணவர்களின் நலன் கருதி, கடந்த 1 ஆம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 50 சதவீத மாணவர்களுடன், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதை அடுத்து, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பது தொடர்பாக, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பான அறிக்கையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடனும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.