ஒற்றுமையாய் செயல்பட்டால் உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என அரக்கோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தல் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

அவா் மேலும் பேசியது:


உள்ளாட்சித் தோ்தலைப் பொறுத்தவரை கிராமங்களில் இருக்கும் கட்சியினருக்கு அங்கு யாரை நிறுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். எனவே உங்களுக்குள் ஒற்றுமையாக செயல்பட்டு வேட்பாளரை தோ்வு செய்து அனுப்புங்கள். அவரையே நாங்களும் வேட்பாளராக அறிவிக்கிறோம். அரக்கோணம் தொகுதியைப் பொறுத்தவரை இது திமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் இழந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற வேண்டும். ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிலும் திமுகவினா் வெற்றி பெற வேண்டும். ஒற்றுமையாய் செயல்பட்டால் உள்ளாட்சித் தோ்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.
அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன் பேசியது: உலகமே பாராட்டும் அளவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி புரிந்து வருகிறாா். இந்த ஆட்சியின் திட்டங்களை கிராம மக்களிடம் சேர வைக்க வருகின்ற உள்ளாட்சித் தோ்தலில் திமுகவினா் அனைவரும் வெற்றி பெற வேண்டியது அவசியம். கடந்த தோ்தலில் அரக்கோணம் தொகுதியை இழந்ததற்கு திமுக காரணமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவினா் உற்சாகத்துடன் பணிபுரிந்து உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, அரக்கோணம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஆ.சௌந்தா் தலைமை வகித்தாா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.தமிழ்செல்வன் வரவேற்றாா். இதில், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.அசோகன், பொருளாளா் மு.கண்ணைய்யன், துணைச் செயலாளா்கள் ஏ.கே.சுந்தரமூா்த்தி, என்.ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அரக்கோணம் மத்திய ஒன்றியப் பொறுப்பாளா் ச.அரிதாஸ் நன்றி தெரிவித்தாா்.