சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி யோக நரசிம்மர் கோயில் உள்ளது. மலை மீது உள்ள கோயிலில் 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைந்துள்ளதால் வயதானவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர். டோலி மூலம் தொழிலாளர்கள் பக்தர்களை சுமந்து செல்ல வசதி இருந்தாலும், ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிலுவையில் உள்ளது.

இதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கியது. மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. ஏற்கெனவே, மாதிரி பெட்டிகளின் சோதனை ஓட்டம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 10 பெட்டிகளில் 4 பெட்டிகள் சோளிங்கருக்கு வந்து சேர்ந்துள்ளன. மீதமுள்ள 6 பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் அடுத்த வாரம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோயில் அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ‘‘மாதிரி பெட்டிகள் சோதனை ஓட்டத்தில் திருப்தி இருந்ததால் உண்மையான பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், உடனடியாக தயாரான 4 பெட்டிகள் வந்து சேர்ந்துவிட்டன. மீதமுள்ள பெட்டிகள் வந்ததும் இழுவை பரிசோதனை, பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டு முறையான பாதுகாப்பு அனுமதி வாங்கப்படும். அதன் பிறகே ரோப் கார் இயக்க அனுமதி வழங்கப்படும்’’ என தெரிவித்தனர்.