ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற கணினி குலுக்கல் முறையில் 11,496 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி நடத்தப்படாமல் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும், என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் கணினி குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி பதிவு அலுவலர்கள், துணை அலுவலர்கள், அலுவலர்கள் என 7 வட்டாரங்களில் பணி செய்ய மொத்தம் 11 ஆயிரத்து 496அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, நெமிலி, காவேரிப்பாக்கம், ஆற்காடு, திமிரி ஆகிய வட்டாரங்களில் தேர்தல் பணியாற்ற 11ஆயிரத்து 496 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக தேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி பதிவு அலுவலர்கள், துணை பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் கால அட்டவணை பணியாளர் ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றனர். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.