ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டை ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலியானார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியில் வாலாஜா பேட்டை ரயில் நிலையத்தில் சிக்னல் கேபிள் பதிக்கும் பணியை ஆந்திரமாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த சீனிவாசலுபாபு என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். அப்பணியினை கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச்சேர்ந்த கூலித் தொழிலாளர்கள், வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று (ஆக.,5) காலை 9 மணிக்கு ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் ஓரமாக ரவி (36), அவர் மனைவி மல்லம்மாவுடன் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய ரவி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் இருந்த மனைவி மல்லம்மா லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் ராணிப்பேட்டை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்குவந்த மீட்பு படையினர், ரவியின் சடலத்தை மீட்டெடுத்து பிரேதப்பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.