திமுக தேர்தல் அறிக்கையில் தொலைநோக்கு திட்டங்களைப் போலவே கவர்ச்சிகர அம்சங்களும் இடம்பெற்றிருந்தன. அவை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் குறிப்பிட்ட சில திட்டங்களை மட்டும் உடனடியாக நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என மக்களும் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் முக்கியமானது கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஆகிய திட்டங்களை மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்தத் திட்டங்களை எல்லாம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணமாக இருந்தாலும் நிதி நிலைமை அதற்கு சாதகமாக இல்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இந்த திட்டங்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் அதற்கு விதிமுறைகள் எதுவும் உள்ளதா என்று விவாதங்கள் எழுந்த நிலையில் யார் யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகிவருகின்றன.
நகைக் கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 5 பவுன் வரை நகைக் கடன் பெற்றவர்கள் தள்ளுபடி திட்டத்தில் பயன்பெறுவர். கடன் அடமானமாக வைக்கப்பட்ட நகை 5 பவுனுக்கும் அதிகமான எடை கொண்டதாக இருந்தாலும், 5 பவுனுக்கான கடன் தொகை மட்டுமே பெற்றிருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். 

5 பவுனுக்கும் அதிகமான நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி வழங்குவதா வேண்டாமா என அரசு பரிசீலனையில் இருக்கிறது. நகைக் கடன் பெற்றவரோ, அவரது ரத்த உறவுகளோ அரசுப் பணிகளில் இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.

அதேபோல தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாரேனும் நகைக் கடன் பெற்றிருந்தாலும் அவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும்.