ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்-பாணாவரம் கூட்டுச்சாலை சந்திப்பில் மளிகை கடை வைத்திருப்பவர் பிரபாகரன். இவரது கடையின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். வழக்கம்போல் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பணம் திருடுபோனதை கண்டு பிரபாகரன் அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், சோளிங்கர் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள 3 ஹார்டுவேர் கடைகளிலும் திருடுபோனது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.