நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறை வீரரான கிறிஸ் கெய்ர்ன்ஸ், இதயக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடி வருகிறார். தற்போது அவுஸ்திரேலியாவின் கென்பெரா நகரில் ஒட்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

51 வயதாகும் கிறிஸ் கெய்ர்ன்ஸூக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது கென்பெரா நகரில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென மயங்கி விழுந்தார்.
தற்போது கென்பெரா நகரில் உள்ள வைத்தியசாலையில் ஒட்சிஜன் உதவியோடு அவருக்கு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்துவரும் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் சிட்னியில் உள்ள சிறப்பு வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்படவுள்ளார்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியில் கடந்த 1989 முதல் 2006 வரை முக்கிய சகலதுறை வீரர்களில் ஒருவராக விளங்கிய கிறிஸ் கேர்ன்ஸ், 62 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.