ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கீழ்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35. பரோட்டா மாஸ்டரான அவர், 2019ம் ஆண்டு ஏப்., மாதம் 5 ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அரக்கோணம் அருகே வேலுார்பேட்டை, அருந்ததியர் பாளையத்தைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், 22, என்பவரை போலீசார் தேடி வந்தனர். இதில், நெம்பர் ஒன் குற்றவாளியான விக்னேஷ் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அரக்கோணம் போலீசார் அறிவித்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே அல்லேரி என்ற இடத்தில் விக்னேஷ் பதுங்கியிருப்பதாகவும், அவருடன் அவர் தந்தை கோபி, 50, தாய், சரளா, 48, இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அரக்கோணம் போலீசார் சென்ற போது அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டதால் இரண்டு ஆண்டுகளாக பிடிக்க முடியாமல் திணறினர்.

அப்போது, வேலுார்பேட்டையைச் சேர்ந்த 23 வயதுள்ள பெண்ணை (மல்லிகா) ஆன் லைன் மூலம் விக்னேஷ் காதலித்து வந்தார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ய விக்னேஷ் திட்டமிட்டார். இதையறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் எப்படியாவது அந்த பெண்ணை அடைய வேண்டி சந்தர்பத்திற்காக காத்திருந்தார்.

இந்நிலையில், நிச்சயதார்த்தம் நடந்த அந்த பெண்ணுக்கு கன்னி பூஜை நடந்த ஏற்பாடுகள் நடந்தது. இதை தெரிந்து கொண்ட விக்னேஷ், அவரது பெற்றோர் கடந்த 15 ம் தேதி வேலுார்பேட்டைக்கு வந்தனர். நேற்று மாலை கன்னி பூஜை நடந்தது. இதில், அழையா விருந்தாளியாக பங்கேற்ற விக்னேஷ் பங்கேற்று காதலிக்கு தாலி கட்ட மஞ்சள் கயிறு மறைத்து வைத்திருந்தார். கூடவே அவரது பெற்றோர் சென்றனர்.

அங்கு தேடியும் காதலி கிடைக்கவில்லை. அப்போது 10ம் வகுப்பு படிக்கும் 14 வயதுள்ள காதலியின் தங்கை அங்கு வந்தார். அவரிடம் உன் அக்கா எங்கே? என பல முறை கேட்டதற்கு தெரியாது என்றே பதில் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், அக்கா இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நீ வேண்டும் எனக்கு என்று கூறி தங்கையை மிரட்டி அவர் கழுத்தில் பலவந்தமாக தாலி கட்டினார். அதற்கு அவர் தந்தை கோபி, சரளா ஆகியோர் உதவிகள் செய்தனர். அதிர்ச்சியடைந்த தங்கை, ஒரு ரவுடியை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறி தாலியைக் கழட்டி எறிந்தார். புகார்படி, அரக்கோணம் மகளிர் போலீசார் ரவுடி விக்னேஷ், தந்தை கோபி, தாய் சரளாவை போக்சோவில் கைது செய்தனர். அப்போது தான் விக்னேஷ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என தெரியவந்தது. இதையடுத்து அரக்கோணம் போலீசார் விக்னேசை இன்று கைது செய்தனர்.