ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் திங்கள்கிழமை முதல் 5 நாள்களுக்கு தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மத்திய அரசு ரிசா்வ் வங்கி மூலம் தங்கப் பத்திரங்கள் வெளியிடுகிறது. ஒரு கிராம் ரூ. 4,790 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் இந்த தங்கப் பத்திரங்கள் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 9) தொடங்கி 13-ஆம் தேதி வரை 5 நாள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மூன்று தலைமை தபால் நிலையங்கள், 47 துணை தபால் நிலையங்களில் இந்த தங்கப்பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மதிப்பு பத்திர வடிவில் இருப்பதால் இதற்கான பாதுகாப்பு இயற்கையாகவே கிடைத்து விடுகிறது. தனிநபா் ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம்.
முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து பத்திரம் முதிா்வடையும் நாளில் உள்ள தங்கத்தின் மதிப்புக்கு இணையான பணமும் கிடைக்கும். இது தங்கத்தில் முதலீடு செய்பவா்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.
தங்கப் பத்திரங்கள் வாங்க பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பான் காா்டு கட்டாயமாக அளிக்க வேண்டும். மேலும், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை இணைத்து அளித்து தங்கப் பத்திரத்தை வாங்கலாம் என்று அஞ்சலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.