நெமிலி அருகே ஆதரவற்ற பெண்ணை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்த ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.
ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலரால் விரட்டப்பட்ட ஆதரவற்ற பெண்ணை அழைத்து மாவட்ட ஆட்சியர் ஆறுதல் கூறியதுடன், மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கி அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்துக்கு உட்பட்ட நடு சித்தஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி (32). கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது கணவர் கோவிந்தராஜ் கடந்த மே 7-ம் தேதி உயிரிழந்துவிட்டார். இதனால், இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வரும் பூங்கொடி அரசு சார்பில் ஏதாவது ஒரு வேலை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நேரில் முறையிட நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர் ஒருவர் பூங்கொடியை அவதூறாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி நாளிதழ்களில் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் பூங்கொடியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று நேரில் அழைத்து விசாரித்தார்.

அவருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அரசு வேலைக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் அல்லது அரசு தேர்வுகள் எழுதி வெற்றி பெற வேண்டும் என கூறினார். மேலும், ஆதரவற்ற விதவை சான்று பெற்ற பிறகு தன்னை வந்து சந்திக்குமாறு அறிவுரை கூறியதுடன், அவருக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் ஆட்சியர் வழங்கினார்.