Taliban captured Afghanistan: Big impact on trade with India

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கா தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்ற காரணத்தால் கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நகரம், மாவட்டங்களைக் கைப்பற்றித் தற்போது தலைநகர் காபூல்-ஐ கைப்பற்றி மொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இதனால் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு மக்கள் வாழப் பிடிக்காமல் மக்கள் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கானி 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டர் முழுசா பணத்துடன் வெளியேறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை..?!


இந்தியாவும், இந்திய அரசுக்கும் தற்போது இருக்கும் முதலும் முக்கியமான பிரச்சனை, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவது தான். இந்தியா ஆப்கானிஸ்தான் உடனான நட்புறவை மேம்படுத்தப் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இதன் அளவீட்டைக் குறைத்தது.



இந்நிலையில் தான் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு பாதுகாப்புக்காக இருந்த அமெரிக்க ராணுவத்தை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து திரும்பப் பெற்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டைத் தற்போது முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.



ஆப்கானிஸ்தான் நாட்டின் முதலீட்டைக் குறைத்த இந்திய அரசு, ஏப்ரல் மாதம் ஹெராட் மற்றும் ஜலாலாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த இந்திய அரசின் திட்டங்களை மூடிவிட்டு இந்திய அதிகாரிகளைத் திரும்ப அழைத்தது. அதன் பின்பு கடந்த மாதம் கந்தகார் மற்றும் மசார் ஆகிய பகுதியில் இருந்த இந்திய தூதரகத்தை மூடியது. இதனால் காபூல் நகரத்தில் இருக்கும் தூதரகம் மட்டும் இயங்கி வந்தது.



தற்போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் காபூல் தூதரகம் ஊழியர்களை இந்தியாவிற்கு அழைத்து வர உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே ஆப்கான் மக்கள் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். இதுமட்டும் தான் பிரச்சனையா..?



ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகத் தாலிபான்கள் கைப்பற்றியதால், இந்தியா - ஆப்கானிஸ்தான் மத்தியில் செய்யப்பட்ட bilateral trade ஒப்பந்தம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா செய்த முதலீடுகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் இனி சாத்தியமாகாது.


இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தப் பிரச்சனையின் மூலம் தடைப் பெற உள்ளது. ஆப்கானிஸ்தான் ஒரு landlocked நாடு, பெரும்பாலான ஏற்றுமதிகள் விமானம் மூலமாகவே செய்யப்படுக்கிறது. இந்த நிலையை மாற்றவே இந்தியா ஆப்கானிஸ்தானில் சாபஹார் துறைமுகத்தைக் கட்டமைக்க முதலீடு செய்தது.


ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு உலர்ந்த திராட்சை, வால்நட், பாதாம், அத்தி, பைன் நட், பிஸ்தா, உலர்ந்த ஆப்பிரிகாட் மற்றும் பழங்களான ஆப்பிரிகாட், செர்ரி, தர்பூசணி மற்றும் சில மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.


இதேபோல் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு டீ, காஃபி, மிளகு, பருத்தி மற்றும் இதர வர்த்தகப் பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தாலிபான்கள் ஆப்கானில்தானை கைப்பற்றியதன் மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகம் தடை பெற்றுள்ளது.


ஆப்கானிஸ்தான் நாட்டை மொத்தமாகத் தாலிபான்கள் கைப்பற்றியது மூலம் பல தீவிரவாத அமைப்புகள் நுழையவும் அதன் மூலம் இந்தியா இதுநாள் வரையில் முதலீடு செய்து உருவாக்கிய கட்டமைப்புகளை அழிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.


தாலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் ANI-க்கு கொடுத்த இண்டர்வியூவில் ஆப்கானிஸ்தானில் இந்தியா உருவாக்கியுள்ள கட்டமைப்புகள் மற்றும் வளர்ச்சி பணிகள் பாராட்டுக்குரியது, அதை அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பதைப் பார்ப்போம்.


மோடி தலைமையிலான அரசு கடந்த வருடம் மட்டும் ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அறிவித்தது. இதற்கு முன் சுமார் 2000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்தியா ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு கட்டமைப்புகள் மற்றும் சேவைகளுக்காக முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள் அனைத்தும் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.


தாலிபான் உடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நன்மையில் முடிய வாய்ப்புக் குறைவு என்பதால் அனைத்து வர்த்தகமும் கராச்சி மற்றும் குவாடர் ஆகிய பகுதிக்குத் திருப்பி விடப்படும். இதனால் இந்தியா சாபஹார் துறைமுகத்தில் செய்த முதலீடுகள் வீணாகியுள்ளது.


இந்தியா தனது வர்த்தக வழித்தடத்தில் பாகிஸ்தானை தவிர்க்க வேண்டும் எனச் செய்த முதலீடுகள் வீணாகி தற்போது திரும்பவும் பாகிஸ்தானை நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்தியா - ஆப்கானிஸ்தான் மத்தியிலான வர்த்தக மதிப்பு 2020-21ல் 1.4 பில்லியன் டாலர், 2019-20ல் இதன் அளவீடு 1.52 பில்லியன் டாலர்.


இந்தியா - தாலிபான் மத்தியிலான உறவைத் தொடர்வதும், கட்டமைப்பதும் மிகவும் கடினம், இதற்கு மிக முக்கியக் காரணம் தாலிபான்கள் ஏற்கனவே பாகிஸ்தான், சீனா-வுக்குச் சாதகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா - தாலிபான் உறவு மேம்படுவது சாத்தியமற்ற ஒன்று.

இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் அமெரிக்கா - உஸ்பெகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இணைந்து Quadrilateral வர்த்தகத் தளத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துடன் சீனா - பாகிஸ்தான் எக்னாமிக் காரிடார் திட்டத்தையும் ஆப்கானிஸ்தான் ரெயில் ரோடு மற்றும் பெல்ட் - சாலை திட்டத்தையும் சீனா இணைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதன் மூலம் இத்திட்டத்திற்குப் பெரும் ஆபத்து உருவாகும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் சீன கட்டுமான ஊழியர்கள் வந்த பஸ் மீது தற்கொலை பாம் வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் 13 சீனர்கள் இறந்தனர்.

இந்தத் தாக்குதலைப் பாகிஸ்தான் நாட்டின் தாலிபான் அமைப்பான Tehrik-e-Taliban Pakistan தான் செய்தது எனப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார். இதனால் சீன கட்டுமானம் மற்றும் Quadrilateral திட்டம் மீது தாக்குதல் நடத்த அதிகளவிலான வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தற்போது அந்நாட்டில் ஆட்சி அமைக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளதால் இந்தியா, பாகிஸ்தான், சீனா உட்படப் பல நாடுகள் தாலிபான்கள் உடன் நட்புறவைப் பாராட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றம் அல்லது சாதகமான பதில்களும் வரவில்லை.