ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி , ஐஐஎம் , ஐஐஐடி , என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் இன மாணவர்கள் 2021-2022 கல்வி ஆண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஒருவருக்கு ₹ 2 லட்சம் வழங்கத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேற்படி கல்வி உதவித் தொகைக்குப் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் 2021-2022 நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் வழங்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்த விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதிக்குள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.