ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் கூட்டுப் பட்டாவில் உள்ள விவசாயிகளுக்குப் பயிர்கடன் வழங்க வேண்டும், என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தின் மூலமாக விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள்மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை டிஆர்ஓ அலுவலகத்தில் டிஆர்ஓ (பொறுப்பு) இளவரசி உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாஸ்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது.

இதில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட அமைப்பாளர் அருண்குமார் பேசுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுப் பட்டா வைத்துள்ள விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுவதில்லை. விவசாயிகளின் நலன் கருதி இதுதொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை உளர வைக்க அனைத்து கிராமங்களிலும் கூடுதலாக நெல்களம் அமைக்க வேண்டும், என்று தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

வாலாஜா தாலுகா சாத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷணன் பேசுகையில், சாத்தம் பாக்கம் பாலாற்றில் கழிவு நீர் திறந்துவிடப்படுவதால் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆற்று நீரின் உப்புத்தன்மை 1,100ல் இருந்து 3,500ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், வள்ளுவம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டம், செங்காடு, கல்மேல்குப்பம், வள்ளுவம்பாக்கம் கிராமங்களில் சொர்ணவாரி பட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் தேக்கமடைந்துள்ளது. அவற்றைக் கொள்முதல் செய்ய வள்ளுவம்பாக்கத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும், என்று தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் அடுத்த மாதத்தில் வள்ளுவம்பாக்கத்தில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படும், என்று தெரிவித்தனர்.

இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எல்.சி.மணி கூறுகையில், ‘ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தற்போது தென்றல் நகர் ரபீக் நகர்ப் பகுதிகளுக்கு அருகே 4வதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும், என்றார். இதுதொடர்பான மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.