அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

திருவாரூரில் கீழ வீதியில் தியாகராஜர் கோயில் அருகில் பழநி ஆண்டவர் கோயில் உள்ளது. முருகப்பெருமான் தண்டபாணியாகக் கோயில் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் தரும் கோயில்களில் திருவாரூர் பழநி ஆண்டவர் திருக்கோயிலும் ஒன்று.

மாவட்டம் :

அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில், கீழ வீதி, திருவாரூர்.

எப்படி செல்வது?

திருவாரூருக்கு முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

தல சிறப்பு:

இங்கு முருகப்பெருமான், ஆண்டிக் கோலத்தில் மேற்கு நோக்கி கோயில் கொண்டருளுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் கோயில் அமைந்துள்ளது. 

அர்த்தமண்டபத்தில் அண்ணன் ஆனைமுகன், மகாகணபதி என்ற பெயரில் அருள்கிறார். அவரது தம்பி பழநி ஆண்டவரை கருவறையில் உள்ளார்.

அறுபடை வீடுகளில் பழநியில் மட்டும்தான் அவரை தண்டாயுதபாணியாக தரிசிக்க முடியும். பழநிக்குச் சென்றாலும் படியேற முடியாதவர்களும் உண்டு. அப்படியான அன்பர்களின் குறை போக்கும் விதமாகவே சமவெளியில் சில தலங்களில் மட்டும் முருகப்பிரான் தண்டபாணியாகக் கோயில் கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். அந்த வகைக் கோயிலுள் ஒன்று, திருவாரூர் பழநி ஆண்டவர் திருக்கோயில்.

பல வருடங்களாக சின்னஞ்சிறு கோயிலாக இருந்த முருகன் கோயில் இது. ஆரூர் கோயிலுக்குள் அமர்ந்திருக்கும் தந்தை சிவபிரானை நேருக்குநேர் பார்த்தபடி, அதுவும் ஆண்டிக் கோலத்தில் கையில் தண்டாயுதம் தரித்து, அருள் தவழும் புன்னகையுடன் முருகன் நிற்கும் திருக்காட்சி மிகவும் விசேஷம்.  

கோயில் திருவிழா :

ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் உற்சவர் வீதியுலாவும் நடைபெறும். சஷ்டி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து விண்ணதிர, மண்ணதிர கோஷமிட்டுக் கொண்டே கோயிலுக்கு வருவார்கள். வைகாசி விசாகத்தன்று காலை முதல் மதியம் வரை முருகனுக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது. பழநி ஆண்டவருக்கு நடத்தப்படும் பாலபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சகல பாவமும் அகலும் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபத் திருவிழாவன்று கோயில் பக்தர்களால் ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கோயிலெங்கும் பிரகாசிக்க, பழநி ஆண்டவரை தரிசிப்பது பக்தர்களை பரவசமடையச் செய்யும். 

பிரார்த்தனை :

மணப்பேறு, மகப்பேறு உட்பட பக்தர்களின் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைக்கிறார் பழநி ஆண்டவர். குறிப்பாக இவருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை செய்து வழிபடுவோருக்கு நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

நேர்த்திக்கடன் :

இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பெரியவர்கள் மாத்திரமின்றி, சிறுவர் சிறுமிகளும் சின்னஞ்சிறு காவடிகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றிடத் திரள் திரளாக வருகிறார்கள்.