நடிகர் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்பட பாணியில் ஆற்காட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து தொழிலதிபரிடம் 6 லட்ச ரூபாய் பணத்தைப் பறித்துச் சென்ற புகாரில் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் உள்பட 6 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த பிரபலத் தொழிலதிபரும், தனியார் கல்லூரி நிறுவனருமான செல்வகுமார் என்ற கண்ணன் (52) என்பவரது வீட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதி சிலர், சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, ரூ.6 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அவர் ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில், ஆற்காடு நகரக் காவல்நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து விசாரித்தனர். அதில், செல்வகுமாரிடம் ரூ.2.50 லட்சம் கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழிலரசு (39) என்பவர், போலி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நேரத்தில் அடிக்கடி நோட்டமிட்டுச் சென்றது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில் செல்வகுமாரிடம் பணத்தைத் திருட நண்பர்கள் உதவியுடன் போலியாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் பரத் (44) என்பவருடன் சேர்ந்து சென்னையில் உள்ள அவரது நண்பரான மது, நரேன் மற்றும் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் சீனியர் இன்கம்டாக்ஸ் உதவியாளராக பணியாற்றி வரும் யாதவ் என்ற ராமகிருஷ்ண யாதவ் உள்ளிட்ட 7 பேர் கும்பல் குறித்த தகவல் தெரியவந்தது.

இந்த வழக்கில் ஆற்காட்டைச் சேர்ந்த எழிலரசு (39), பரத் (44) பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ண யாதவ் (58), சென்னை முகப்பேரைச் சேர்ந்த மது (40), சென்னை ஜாமியா பகுதியைச் சேர்ந்த சையத் கலீல் (33), சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த முபினா (37) ஆகிய 6 பேரையும் நேற்று இரவு ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான காவலர்கள் கைது செய்தனர்.
இவர்கள் அனைவரும் நடிகர் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற திரைப்பட பாணியில் போலி வருமான வரித்துறை அதிகாரிகளாக நடித்து ரூ.1 கோடி பேரம் பேசி கடைசியாக அவரிடம் இருந்த ரூ.6 லட்சம் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். வந்தவர்கள் போலி வருமான வரித்துறை அதிகாரிகள் என்பதை உறுதி செய்துகொண்ட செல்வகுமார், முதலில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளார். ஆனால், அவர்கள் மீண்டும் வந்து மிரட்டலாம் என்பதால் புகார் அளித்துள்ளார். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம், ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள நரேன் என்பவரை தேடி வருகின்றனர்.