ராணிப்பேட்டை: நெமிலியில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளிடம் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் வாங்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் சரஸ்வதி, பயனாளிகள் ஒவ்வொருவரிடம் ₹1000 லஞ்சமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இதை அங்கிருந்தவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வலைத்தளங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ₹25 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ₹50 ஆயிரம், 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஒன்றியங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பித்தனர். அப்போது அவர்களிடம் சுமார் ₹4 ஆயிரம் முதல் ₹5 ஆயிரம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.