ராணிப்பேட்டை பெல்- அக்ராவரம் சாலையில் தனியார் அமைப்பு சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 


ராணிப்பேட்டை அடுத்த பெல் அக்ராவரம் சாலையில், மண்ணும் மரமும் அமைப்பு சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பெல் கூடுதல் பொதுமேலாளர் ராஜிவ் தலைமை தாங்கினார். இயற்கை ஆர்வலர்கள் பரந்தாமன், ஜெயவேலு, பெல்சேகர், சக்கரவர்த்தி, சுகுமார், சேகர், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சேலம் மாவட்டம் மேச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகளை பெல் டவுன்ஷிப், காட்பாடி கழிஞ்சூர் ஏரி, கசம், திருவலம், பெல், சிப்காட் உள்ளிட்ட இடங்களில் ஏரி, குளங்கள், ஆற்றங்கரையோரங்களில் நட்டனர். இந்த அமைப்பு சார்பில் இதுவரை 15க்கும் மேற் பட்ட ஏரிகளில் 1.78 லட்சம் பனை விதைகள் நட்டுள்ள தாகவும், மொத்தம் 2 லட்சம் விதைகள் நட இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், பனை விதைகள் நட்டால் மண் வளம், நீர்வளம் பாதுகாக்கப்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.