வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் 118 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த கட்டிட பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கிளாஸ்டன் புஷ்பராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுமான பணிகள் துரிதமாக முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், எதிர்பார்க்கப்பட்ட கால அளவைவிட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பணிகள் நிறைவு பெறும் என தெரிவித்தார்.

கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமான ஊழியர்களிடமிருந்து தனிக்கிழுவின் மூலமாக ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது, கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படவுள்ள நூலகத்திற்காக ஆறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் மூன்று இடங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இடம் 3 நாட்களில் தேர்வு செய்யப்படும் எனவும் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கும் பணிகள் கூடிய விரைவில் துவங்கப்பட்டு முழுவீச்சில் நடத்தி முடிக்கப்படும் என கூறினார்.