ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தை முந்திச் சென்ற தகராறில் ஆற்காடு நாதமுனி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (28) என்பவரை லாரி ஓட்டுநர் ஒருவர் கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். மணிகண்டனுடன் இருந்த அவரது நண்பர் அருண் என்பவருக்கும் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படை யில் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் அருகே தனியாக நிறுத்தப்பட்டிருந்த லாரியை தனிப் படை காவலர்கள் பறிமுதல் செய்து விசாரித்தபோது, ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் போஸ்கோ (36) என்பவர்தான் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. 

அவரிடம் நடத்தப்பட்ட முதற் கட்ட விசாரணை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘பெங்களூருவில் உள்ள தனியார் பார்சல் நிறுவனம் ஒன்றில் ஜான் போஸ்கோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து பார்சல் ஏற்றிய சரக்கு லாரியை சென்னை துறைமுகம் நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன், மற்றொரு சரக்கு லாரியும் சென்றுள்ளது. இரண்டு ஓட்டுநர்களும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியில் உள்ள பிரபல ஓட்டல் அருகே லாரிகளை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளனர்.

அப்போது, லாரியை வழிமறித்த மணிகண்டன் கத்தி முனையில் ஜான் போஸ்கோவிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதில், ஏற்பட்ட தகராறில் ஜான் போஸ்கோவுக்கு கையில் கத்தி வெட்டு ஏற்பட்டுள்ளது. திடீரென மணிகண்டனின் கையில் இருந்த கத்தி கீழே விழுந்துள்ளது. அதை உடனடியாக எடுத்த ஜான் போஸ்கோ, மணிகண்டனை குத்தி கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த அருணும் கத்தியுடன் ஜான் போஸ்கோவை குத்த முயன்றுள்ளார். அவருக்கும் கத்தி வெட்டு விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அருண் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பியுள்ளார்.

கத்தி வெட்டில் காயமடைந்த ஜான் போஸ்கோவும் மற்றொரு லாரி ஓட்டுநரும் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பியுள்ளனர். அப்போது, அவருடன் வந்த லாரி ஓட்டுநரிடமும் மணிகண்டன், அருண் ஆகியோர் கத்தி முனையில் பணம் பறித்திருப்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் சென்றதும் லாரியை நிறுத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்ற ஜான் போஸ்கோ கையில் ஏற்பட்ட காயத்துக்கு தையல் போட்டுக்கொண்டு தப்பியுள்ளார்.

மணிகண்டன், அருண் ஆகியோர் கடந்த சில நாட்களாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து, ஜான் போஸ்கோ தெரிவித்த தகவலின் அடிப்படை யில் அருணிடம் காவல் துறையினர் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், ஜான் போஸ்கோவுடன் வந்த லாரி ஓட்டுநரிடம் பணம் பறித்தது தொடர்பாக அருண் மீது வழிப்பறி வழக்குப் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.