சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லதுரை கொலைச் செய்யப்பட்ட வழக்கில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வேலூரைச் சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சேலம் கிச்சிப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிச. 22ஆம் தேதி ரவுடி செல்லத்துரை என்பவரைக் கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டிய வழக்கிலும் கும்பல் தலைவனாக செயல்பட்டார்.

இந்நிலையில் வசூர் ராஜா, பிணையில் வெளியே வந்தால் அவர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் தெற்கு சரக காவல்துறை உதவி ஆணையர் மோகன்ராஜ், சேலம் மாநகர ஆணையர் நஜ்முல் ஹோதாவிற்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின்பேரில் ரவுடி வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டார். இதற்கான கைது ஆணை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசூர் ராஜாவிடம் புதன்கிழமை (ஜூலை 21) சார்வு செய்யப்பட்டது.