வேலுார்:வேலுாரில், இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்ட பின்னும், கொரோனா தொற்று பாதித்து அரசு பெண் டாக்டர் பலியானது குறித்து, சுகாதாரத் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா, 47; வேலுார், சைதாப்பேட்டை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவர், ஏற்கனவே கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுள்ளார். இந்நிலையில், மே 29ல் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

வேலுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அவரது உடல்நிலை மோசமாகவே, வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாரான போது இறந்தார்.

இது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிவண்ணன் கூறியதாவது: டாக்டர் ஹேமலதா, கடந்த பிப்ரவரியில் கோவிஷீல்ட் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு அதிகளவு இருந்தது. அவருடைய மருத்துவ அறிக்கை, கடந்த மூன்று மாத சர்க்கரை அளவு குறித்த அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஹேமலதாவின் கணவர் சுரேஷ், 50. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 20 வயதில் மகள் உள்ளார்.