அமைவிடம் :
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. இக்கோயிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
மாவட்டம் :
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
எப்படி செல்வது?
கும்பகோணம்-தஞ்சாவூர் ரோட்டில் நகரின் மையத்தில் கோயில் இருக்கிறது. அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது.
கோயில் சிறப்பு :
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோயில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோயிலாகும்.
கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு, சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு உத்தான சயன கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர்.
இக்கோயிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இது குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக்கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும்.
திருமணத்திற்காக இத்தலம் வந்த பெருமாள், தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலைக் காணாத தாயார் கலக்கமடைந்தார். அதன்பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி, தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம், 'பாதாள சீனிவாசர் சன்னதி" என்ற பெயரில் உள்ளது. திருமணத்துக்குப் பிறகு, இவர், மேடான இடத்தில், 'மேட்டு சீனிவாசராக" தாயார்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற்பாதியில் திறக்கப்படுகிறது.
11 நிலைகள், 150 அடி உயரம் கொண்ட இத்தலத்து தேரும் விசேஷமானது. சித்திரத்தேர் எனப்படும் இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், 'ரதபந்தம்" என்று அழைக்கப்படுகிறது.
கோயில் திருவிழா :
சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவற்றை அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயிலில் கொண்டாடபடும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
பிரார்த்தனை :
கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
நேர்த்திக்கடன் :
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்மாயம் படைத்தும் வழிபடுகின்றனர். (கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.)