ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் பக்ரீத் பண்டிகையொட்டி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இதில் மாஸ்க், சமூக இடைவெளி இன்றி மக்கள் குவிந்ததால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் வழக்கமாக காய்கறி, மளிகை பொருட்கள் வியாபாரம் ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் ஆடுகள், கோழிகள் விற்பனை அதிகமாக நடைபெறும். இதில் ஆடுகளின் விற்பனையே அதிகமாக காணப்படும். ராணிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமப்புறங்கள் மற்றும் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து ஆடுகளை விற்பதும், வாங்கிச்செல்வதும் வழக்கம். அதன்படி வாரந்தோறும் பல லட்சம் மதிப்பில் ஆடுகள் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சந்தை இயங்க தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் காரணமாக கடந்த வாரம் முதல் ராணிப்பேட்டை சந்தை வழக்கம்போல் இயங்கத்தொடங்கியது. நேற்று 2வது வாரமாக ராணிப்பேட்டை வாரச்சந்தை கூடியது. வரும் 21ம் தேதி பக்ரீத் பண்டிகை காரணமாக வழக்கத்தை விட நேற்று ஆயிரக்கணக்கான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு வந்தது.

இதனை வாங்க வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

பல லட்சங்களுக்கு நேற்று வர்த்தகம் நடந்தது. இந்நிலையில் சந்தைக்கு வந்த பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். கொரோனா 3வது அலை அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வாரச்சந்தையில் பொதுமக்கள் விதிகளை கடைபிடிக்காமல் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.