அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்...!!

அமைவிடம் :

திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன. அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வடதிருமுல்லைவாயில் சென்னையில் அமைந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 255 வது தேவாரத்தலம் ஆகும்.

மாவட்டம் :

அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில், சென்னை.

எப்படி செல்வது?

சென்னை - ஆவடி சாலையில் திருமுல்லைவாயில் உள்ளது. பூந்தமல்லியிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை அடுத்து, திருமுல்லைவாயிலை சென்று கோயிலை அடையலாம். இத்தலத்திற்கு மெட்ரோ ட்ரெயின் மார்க்கமும் உள்ளது. மேலும் சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோயில் சிறப்பு :

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்தில் உள்ள சுயம்புலிங்கம், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி தருகிறார். வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக்காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி தருகிறார்.

இத்தலத்தில் உள்ள மூலவருக்கு அபிஷேகம் இல்லாததால், ஒரு பாதரச லிங்கத்தை தனிச்சன்னதியில் வைத்து பூஜிக்கிறார்கள்.


இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால் சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்த்திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. 

சுவாமியே பிரதானம் என்பதால் நவகிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு.

வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தில் இவளை வணங்கினால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பதும், இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

இத்தலத்து விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருளுகிறார்.

இத்தலத்தில்தான் சிறப்புமிக்க வைஷ்ணவி ஆலயமும், பிரார்த்தனைக் கோயிலாகிய பச்சையம்மன் கோயிலும் உள்ளன.

தொண்டைமானுக்கு அவசரத்தில் காட்சி தந்ததால் அம்பாள் சந்நிதி சுவாமிக்கு வலப்புறமாக உள்ளது.

கோயில் திருவிழா :

வைகாசி பிரம்மோற்சவம், மாசித்தெப்பத்திருவிழா, ஆனியில் வசந்த உற்சவம் போன்றவை கொண்டாடப்படுகிறது. 

வேண்டுதல் :

பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாற்றிய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன் :

பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறியவுடன் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்கிறார்கள்.